அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
திருச்சி: திருச்சியிலிருந்து, வளைகுடா நாடுகளுக்கு விமான சேவைக்கு அனுமதி கொடுக்க மறுப்பு, விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் ஆகியவற்றில், மத்திய, மாநில அரசுகள் பாரமுகத்துடன், மெத்தனமாக செயல்படுவது, திருச்சி விமான நிலையம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி விமான நிலையம் கடந்த, 2012ம் ஆண்டு சர்வதேச விமான நிலையமாக, அப்போதைய காங்கிரஸ் அரசால் அங்கீகாரம் செய்து அறிவிக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை, 8,136 அடி உள்ளது. விமான ஓடுபாதை மூலம் குறுந்தொலைவு பயணிக்கும், 'நேரோ பாடி' என்ற சிறிய ரக விமானங்கள் மட்டுமே ஏறி, இறங்க முடியும். 'வைட் பாடி' எனப்படும் பெரியரக விமானங்களை இயக்க முடியாது.

ஓடுபாதை விரிவாக்கம்? ஆகையால், திருச்சி விமான நிலையத்துக்கு பல்வேறு நாடுகளின் விமானங்களும் வந்து செல்லும் விதமாக, விமான நிலைய ஓடுபாதையை, 12 ஆயிரத்து, 500 அடியாக உயர்த்த இந்திய விமானநிலைய ஆணையக்குழு முடிவு செய்தது. அதற்காக திருச்சி விமான நிலையத்தின் பின்புறம் உள்ள, 510 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்க, கடந்த, 2010ம் ஆண்டே தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதில், 164 ஏக்கர் நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது என்பதால், அதை கையகப்படுத்த முயற்சி நடந்து வருகிறது. மீதியுள்ள, 346 ஏக்கர் நிலத்தில் முதல்கட்டமாக, 10 ஆயிரத்து, 500 அடிக்கு விமான ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், 346 ஏக்கர் நிலத்தை மட்டும் கையகப்படுத்த, தமிழக அரசுக்கு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மூலம், விமான நிலைய அதிகாரிகள் கோரிக்கை விடுத்து, ஆறு ஆண்டு ஆகிவிட்டது. ஆனால், இதுவரை நிலம் கையகப்படுத்துவது தொடர்பான எந்த பணியையும் தமிழக அரசு அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகமோ ஆக்கபூர்வமாக செய்யவில்லை. இதை தமிழக அரசிடம், திருச்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் வலியுறுத்தவில்லை. ஆகையால் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் என்பது, வெறும் எழுத்து வடிவிலான திட்டமாக, ஆறு ஆண்டுகளாக இருந்து வருகிறது.

6 ஆண்டுகளாக தொடர்கதை: ஆனால், திருச்சி விமான நிலையத்தில், ஆறு மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும், விமான நிலைய மேம்பாடு ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் ஆலோசனை மட்டும் நடத்தப்படும். பின்னர் அந்த விஷயம் அப்படியே கிடப்பில் போடப்படும். கடந்த ஆறு ஆண்டுகளாக இது தொடர்கதையாக நடந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்துக்கு பயணிகள் மற்றும் சரக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்படுகிறது. ஓடுபாதை பிரச்னையால் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள், தங்களின் சேவையை திருச்சியில் துவக்க விரும்பியும், அது முடியாத நிலை உள்ளது.

மத்திய அரசு பாராமுகம்: தமிழக அரசின் அலட்சியப் போக்கால், ஓடுபாதை விரிவாக்க திட்டம், கிடப்பில் போடப்பட்டு உள்ளது என்றால், வளைகுடா நாடுகளின் விமான சேவை நிறுவனங்கள், திருச்சிக்கு விமானங்களை இயக்க, மதியதிய அரசு அனுமதி கொடுக்காத காரணத்தால், சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரசு நாடுகள், பக்ரைன், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் பணியாற்றி வரும் தமிழர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வளைகுடா நாடுகளில், தமிழர்கள் மட்டும், 20 லட்சம் பேர் உள்ளதாக வெளியுறவுத்துறை கணக்கீடு சொல்கிறது. இவர்களில், 60 சதவீதம் பேர், திருச்சி விமான நிலையத்தையே அருகாமை மாவட்டங்களாக கொண்டவர்கள். ஆகையால் தான், வளைகுடா நாடுகளின், தமிழர் சங்கங்களின் முக்கிய அங்கமாக விளங்கும், குவைத் தமிழ் இஸ்லாமிக் அமைப்பு, 'திருச்சிக்கு, வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்கள் சேவையை, மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனால் ,மத்திய அரசே அந்த கோரிக்கையை இதுவரை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளின் எமிரேட்ஸ், பிளை துபாய், குவைத் ஏர்வேஸ், கத்தார் ஏர்வேஸ், கல்ப் ஏர்வேஸ், ஓமன் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்கள், தங்களின் சேவையை திருச்சிக்கு வழங்க விருப்பம் தெரிவித்தும், அதற்கு மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. அனுமதி அளிக்க மறுப்பதற்கு முறையான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் மத்திய அரசுக்கும், விமான நிலைய ஆணையத்துக்கும், அதிகவருவாயை ஈட்டித்தரும் விமானநிலையங்களில் ஒன்றாக உள்ள திருச்சியை விட, குறைவான பயணிகளை கையாளும், அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், நாக்பூர், கோவா ஆகிய விமான நிலையங்களுக்கு வளைகுடா நாடுகளின் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசியல் நெருக்கடி: தவிர, கேரளா மாநிலம் கண்ணூரில் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படாத விமான நிலையத்துக்கு கூட, வளைகுடா நாடுகளின் விமான சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு அந்த மாநில அரசியல்வாதிகள், மத்திய அரசுக்கு கொடுத்த நெருக்கடி காரணமாகும். ஆனால், தமிழகத்திலிருந்து அப்படியொரு நெருக்கடியை, இதுவரை, எந்த கட்சியும் கொடுக்கவில்லை.

வருவாய் பாதிப்பு: திருச்சி விமான நிலையத்தின் மீது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பாராமுகம் தொடர்வதால், திருச்சி மாநகரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இங்கிருந்து வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் திருவனந்தபுரம், கொச்சின், பெங்களூரூ ஆகிய அண்டை மாநில விமான நிலையங்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவதால், திருச்சி விமான நிலையத்துக்காக வருவாய் பாதிக்கப்படுகிறது. சில விமான நிறுவனங்களே சேவையில உள்ளதால், பயணிகள் மற்றும் சரக்கு விமானக்கட்டணமும் அதிகமாக உள்ளது.

சுற்றுலா வருவாய்: தற்போது திருச்சி விமான நிலையத்தில், வாரம் தோறும், வெளிநாடு மற்றும் உள்நாடு என, மொத்தம், 96 விமான சர்வீஸ்கள் கிடைத்து வருகிறது. வளைகுடா நாடுகளின் விமானத்தை அனுமதித்தால் இது பலமடங்கு உயரும். இதனால் திருச்சி விமான நிலைய வருவாய், பல மடங்கு அதிகரிக்கும். திருச்சி விமான நிலையத்திலிருந்து, தற்போது தினமும், 20 டன் சரக்கு கையாளப்படுகிறது. இதுவும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளதால், அதன்மூலம் கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும். அண்டை மாநிலங்களுக்கு செல்லும் வருவாய் தடுக்கப்படும். தினசரி, 3,000 முதல், 3,500 பயணிகள் வரை, கையாளப்படும் திருச்சி விமான நிலையம், 10 ஆயிரம் பயணிகள் வரை கையாளும் விமான நிலையமாக மாறும். சுற்றுலா வருவாய் பெருகும். இப்படி பல வகையான நன்மைகள் இருப்பதால், திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப் பணிக்கும், வளைகுடா நாடுகள் விமானம் இயக்க அனுமதி பெறவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி : தினமலர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-