அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மும்பை: வீட்டு வேலைக்கு என அழைத்துச் சென்று 500க்கும் அதிகமான இந்திய பெண்களை துபாயில் விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் பிடிபட்டான். கடத்தல் கும்பலின் பிடியிலிருந்து தப்பிய, பெண் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் துபாய் போலீசார் அவனை கைது செய்தனர். தப்பி வந்த பெண்ணின் பெயர் மும்தாஜ் ஷேக் (37). மாற்றுத்திறனாளியான கணவர், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மாமனார், 14 வயது மகள் ஆகியோருடன் மும்தாஜ் கொலாபாவில் வசித்து வருகிறார். அவரது உழைப்பையே அந்த குடும்பம் நம்பி இருக்கிறது. இந்த நிலையில் மும்தாஜ் வேலை செய்துவந்த இடத்தில் குலாப்ஜான் சையத் (40) என்ற பெண் அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் ஆனார். அதன்பின் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களின் குடும்ப பிரச்னைகளை பகிர்ந்து பேசி மிகவும் நெருக்கமானார்கள்.

தோழி என்ற முறையில் குலாப்ஜான் அடிக்கடி மும்தாஜின் வீட்டுக்கும் செல்லத் தொடங்கினார். இந்த நிலையில் மும்தாஜ் மீது பரிதாபப்படுவது போல் நடித்த குலாப்ஜன், சவூதி அரேபியாவில் ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாக மும்தாஜிடம் கூறினார். வீட்டின் வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலைகளை பார்த்த மும்தாஜ் அந்த வேலைக்கு செல்ல சம்மதித்தார். அத்துடன் செய்துவந்த வேலையைும் உதறி தள்ளினார். அதன் பிறகு அடையாளம் தெரியாக 3 நபர்களை மும்தாஜூக்கு குலாப்ஜான் அறிமுகம் செய்தார். அவர்கள்தான் மும்தாஜ் சவூதி அரேபியா செல்வதற்கு ஏற்பாடுகள் செய்பவர்கள் என குலாப்ஜான் கூறினார். பின்னர் அந்த மர்ம நபர்கள் மும்தாஜை சவூதி அரேபியா அழைத்துச் சென்றனர்.

விமான நிலையத்தில் இறங்கிய பின்னர்தான் அது துபாய் என மும்தாஜூக்கு தெரியவந்தது. சவூதி அரேபியா என கூறி ஏன் துபாய் கொண்டு வந்தீர்கள் என கேட்ட தனக்கு அதன் பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் திகிலாக இருந்தது என மும்தாஜ் கூறினார். அது குறித்து அவர் கூறியதாவது; “துபாயில் அவர்களுடன் நான் தங்கியிருந்த அந்த 4 நாள் அனுபத்தை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. அப்தாப் கான் என்வர்தான் என்னை துபாய் அழைத்துச் சென்றார். துபாய் விமான நிலையம் சென்றதும் அங்கே இருக்கும்படியும் எங்கேயும் நகரக்கூடது என்றும் கூறிவிட்டு அப்தாப் கான் சென்றுவிட்டார். அன்று இரவு முழுவதும் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் அங்கேயே இருந்தேன்.

அடுத்தநாள் காலையில் வந்த அவர் அங்கேயே தொடர்ந்து இருக்கும்படி சொன்னார். அப்போது நான் எனது சவூதி விசா குறித்து கேட்டேன். அதற்கு விசா தன்னிடம் இருப்பதாகவும் அதை எனக்கு காட்ட முடியாது எனவும் கூறினார். கையில் பணம் எதுவும் இல்லாததால் கழிப்பறையில் சென்று தண்ணீர் குடித்து வயிற்றை நிரப்பி அடுத்தநாள் முழுவதும் இருந்தேன். 3வது நாளும் வந்து என்னை அங்கேயே இருக்கும்படி கூறினார். அவரது நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் என்னை இந்தியாவுக்கு அனுப்புமாறு கூறினேன். அப்தாப் கான் உடனே என்னை மிரட்டத் தொடங்கினார். கொலாபாவில் உள்ள எனது மகளை தீர்த்துக் கட்டிவிடுவதாக கூறினார்.

நான் பொறியில் சிக்கிக்கொண்டதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அதனால் தப்பிக்க வழி தேடினேன். நான்காவது நாள் அப்தாப் கான் என்னை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று மயக்க ஊசிபோட முயன்றார். உடனே அவரிடம் இருந்து தப்பிக்க அப்தாப் கானை பிடித்து தள்ளிவிட்டு ரோட்டில் ஓடத் தொடங்கினேன். அவர் துரத்திவந்து என்னை பிடித்துக் கொண்டார். சற்று நேரத்தில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் எங்கள் இருவரையும் பிடித்துக் கொண்டனர். அவர்களிடம் கடந்த 4 நாட்களாக நான்பட்ட அவஸ்தைகளை விளக்கினேன். அப்போது தான் இது போன்று பெண்களை கடத்திச் சென்று விற்கும் கும்பல் இருப்பது தெரியவந்தது. என்னை போன்ற 500க்கும் அதிகமான பெண்களை கடத்தி சென்று விற்பனை செய்துள்ளதாக தாங்கள் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் பிடிபட்ட அப்தாப் கான் அந்த கும்பலை சேர்ந்தவன் எனவும் போலீசார் தெரிவித்தனர். துபாய் போலீசாரின் உதவியுடன் நான் மும்பை வந்து சேர்ந்தேன். உடனே கொலாபா போலீசில் சென்று புகார் செய்தேன். இவ்வாறு மும்தாஜ் கூறினார்.

இந்த சம்பவத்தை கொலாபா போலீசார் உறுதி செய்தனர். மும்தாஜை ஏமாற்றிய குலாப் ஜான் மற்றும் அவர் அறிமுகம் செய்து வைத்த இரண்டுபேர் ஆகியோரை கைது செய்தோம். மேலும் 500க்கும் அதிகமான பெண்கள் அங்கு சிக்கியுள்ளதாக மும்தாஜ் கூறியதால் அவர்களை பற்றிய விவரங்களை துபாய் போலீசாரிடம் கேட்டிருக்கிறோம் என்று கொலாபா போலீசார் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-