அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 பயணிகளை ஈர்க்க கட்டணம் குறைக்கப்படுமா?


ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு தினமும் செலவிடும் தொகையில் 50 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் கட்டணம் வசூலாகிறது. எனவே, பெரும்பான்மையான மக்கள் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தை கணிசமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பயணிக்கும் மெட்ரோ ரயில்| படம்: ம.பிரபு.

சென்னையில் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 29-ம் தேதி தொடங்கப்பட்டது. குளுகுளு பயணம், சர்வதேச தரத்திலான ரயில் நிலையங்கள் போன்ற அம்சங்களால் மெட்ரோ ரயிலுக்கு மக்கள் மத்தியில் முதலில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ரயில் சேவை தொடங்கிய முதல் வாரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விஐபிகளும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். முதல்முறை அனுபவத்துக்காக பலர் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

ஆனால், கட்டணம் அதிகம் என்பதால் நாளுக்குநாள் கூட்டம் குறைந்து வருகிறது. விடுமுறை நாட்களில் மட்டுமே மெட்ரோ ரயில்களில் பயணிகளை அதிகம் காணமுடிகிறது. வார நாட்களில் கூட்டம் குறைவாகவே உள்ளது.

மெட்ரோ ரயில் கட்டணத்தை (ஆலந்தூர் - கோயம்பேடுக்கு ரூ.40) ஒப்பிடுகையில், மாநகர ஏசி பேருந்து, ஷேர் ஆட்டோ கட்டணம் குறைவாக இருக்கிறது. இதனால், தினமும் அலுவலகம் செல்வோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய தயங்குகின்றனர். பயணிகளை ஈர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, சுற்றுலா கார்டு திட்டங்களும் பெரும் வரவேற்பை பெறவில்லை.

தீபாவளி பண்டிகையின்போது பேருந்து, மின்சார ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், மெட்ரோ ரயில்களில் பெரிய அளவில் கூட்டம் செல்லவில்லை. எனவே, பெரும்பாலோர் பயணம் செய்யும் வகையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை கணிசமாக குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு தினமும் செலவிடும் தொகையில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கட்டண வசூல் மூலம் பெறமுடிகிறது. ஒட்டுமொத்த செலவில் மின்சார செலவு 50 சதவீதமாகும். இதுதவிர ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு பணிகள் ஆகியவையும் இருக்கின்றன.

பொதுபோக்குவரத்து பயன்பாடு கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஸ்மார்ட் கார்டு, சுற்றுலா கார்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். எழும்பூர், பரங்கிமலை, விமான நிலையம், சென்ட்ரல் ஆகிய இடங்களை இணைக்கும்போது, மெட்ரோ ரயில்களில் அதிகளவில் கூட்டம் வரும் என நம்புகிறோம். கட்டணத்தை குறைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கபடவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் டி.சடகோபன், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘பயணிகளை ஈர்க்கும் வகையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க வேண்டும். பல இடங்களில் நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடித்து, மற்ற போக்குவரத்தையும் இணைக்க வேண்டும். அப்போதுதான் மின்சார ரயில்களைப்போல மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் அதிகரிக்கும்’’ என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-