அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Dinamalar Banner Tamil News

'தமிழகத்தில், 10 ஆண்டுகளில் மக்களுக்கு இலவசப் பொருட்கள் வழங்குவதற்காக, அரசு, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இந்நிதியை கட்டமைப்புக்கு செலவிட்டிருந்தால், மழை, வெள்ள நிவாரணத்துக்கு, கையேந்த வேண்டிய நிலை வந்திருக்காது' என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


வடகிழக்கு பருவ மழை, நவ., 8ல் துவங்கி, இப்போதும் தொடர்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம் என, வட கடலோர மாவட்டங்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. கடலுார் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான வீடுகள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன; பயிர்கள் சேதமடைந்தன. வீடுகளை இழந்து, மக்கள் பரிதவிக்கின்றனர். பாலம், சாலைகள் என அனைத்தும் சேதமடைந்தன. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், மழை நீர் வெளியேற வழியின்றி,குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கிறது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் அரசு நிவாரண முகாம்களில், தஞ்சம் அடைந்துள்ளனர். வீடுகளில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்கள், நாற்காலி, சோபா என எல்லாம் தண்ணீரில் மூழ்கின. இதனால், மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகினர். இது தொடர்பாக, முதல்வர்ஜெயலலிதா, 23ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 8,481 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, அவசரமாக சேத மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதன்பிறகும் மழை தொடர்ந்ததால், சேத மதிப்பு இன்னும் அதிகமாகும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாரங்கள் கடந்தும், மழை நீர் வடியாததால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், வீடுகளுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில், போதிய கட்டமைப்பு வசதிஇல்லாததால் தான், தண்ணீர் வெளியேற முடியவில்லை. இப்போது சாலை, தெரு, வீடுகள் எல்லாமே தண்ணீரில் மிதக்கின்றன. கடந்த, 10 ஆண்டுகளில், மக்களுக்குஇலவசப் பொருட்கள் வழங்க செலவிட்ட தொகையை, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த செலவிட்டிருந்தால், இந்த சேதத்தை தவிர்த்திருக்கலாம் என்பதே, நிபுணர்களின் கருத்து.

இது தொடர்பாக, நிதித் துறை நிபுணர்கள் சிலர் கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில், 1.52 கோடி பேருக்கு இலவச கலர், 'டிவி' வழங்க, 2,600 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில், 1.85 கோடி மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்ற இலவசப் பொருட்கள் வழங்க, 7,400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த, 10 ஆண்டுகளில் மட்டும் இலவசப் பொருட்கள் வழங்க, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்தொகையை, கட்டமைப்பு ஏற்படுத்த செலவிட்டிருந்தால், வெள்ள சேதத்தை தவிர்த்திருக்கலாம்; வெள்ள நிவாரணத்துக்காக, மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது. எனவே, அரசு இனிமேலாவது இலவசங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைவிட்டு, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-