
ஆம்பூரில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
வேலூர் மாவட்டம், ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணகாரத் தெருவைச் சேர்ந்த ஷாஜகானின் மகன் ஷமில் அஹமத் (26) என்பவரை பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஒரு பெண் காணாமல் போனது தொடர்பான விசாரணைக்க்கு போலீஸார் கடந்த 15ம் தேதி அழைத்துச் சென்றனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீஸார் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஷமில் அஹமத் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஷமில் அஹமத் வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். இதையடுத்து சுமார் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர், போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்யக் கோரி ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இச்சம்பவம் வன்முறையாக மாறியது. உயிரிழப்பிற்கு காரணமான இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது வன்முறையாளர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் எஸ்.பி செந்தில் குமாரி மற்றும் போலீசார் காயமடைந்தனர்.
மேலும் போலீஸ் வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. பயங்கர கலவரம் ஏற்பட்டதை அடுத்து போலீசார், மாறுவேடத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் இரவு நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் ஏராளமான போலீஸார் காயம் அடைந்தனர். 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாவட்ட காவல் அதிகாரி மஞ்சுநாத் கூறினார்.
இந்நிலையில் கைதி மரணம் தொடர்பாக பள்ளி கொண்டா காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சபாரத்தினம், போலீஸார் நாகராஜ், அய்யப்பன், சுரேஷ், முரளி, முனியன் ஆகியோர் ஷமீல் அஹ்மதுவை காவலில் வைத்து தாக்கியதாக அலி அக்பர் (40) என்பவர் அளித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீஸார், 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறும்போது, ‘‘ஷமீல் அஹ்மது மரணம் குறித்து வேலூர் ஜே.எம்.1-வது நீதிபதி மும்மூர்த்தி விசாரணை நடத்துவார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் நீதிபதி மும்மூர்த்தி முன்னிலையில் ஷமீல் உடல் பிரேதப் பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நீதிபதி விசாரணை நடத்துவார்’’ என்றார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.